...இன்றைய சுவையின் வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Sunday, October 19, 2014

உயிர் காற்றை வெளியிடும் மரங்களை நடுவோம் - மரம்

இறைவனின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் கருவிகளாக மரங்களும், செடிகளும் உள்ளன.
                                                            
சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்புவோர்கள் வீட்டில் மரம் நட விரும்புவார்கள்.ஆனால்,என்ன மரம் நடுவது என்பது குறித்து பல்வேறு யோசனைகள் இருக்கும்...!!!ஏன் நம் வீடுகளில் ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் புங்க மரத்தை நடக்கூடாது......???!!!

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளரும் மர வகைகள் இவை இரண்டுமாகும்... 

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.      

                   

ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.

 ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!

எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்


ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
                                                           


புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்...
அருகில் உள்ள நர்சரிகளில் இம்மரக்கன்றுகள் கண்டிப்பாக கிடைக்கும்...
விலை 40 ரூபாய்க்கு குறைவாகத்தான் கிடைக்கும்
வீட்டிற்கு ஒரு மூங்கில் மற்றும் புங்க மரம் வளர்ப்போம்!!!
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!!

Friday, October 10, 2014

மரம் வளர்ப்போம் உலகத்தை காப்போம் - இயற்கை

குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக
யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...
மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....
பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.


90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி
‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.


இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.


செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.


கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.


90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?


*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.


*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.


* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.


* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.


* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.


மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.



தொடர்புக்கு : 97903 95796

www.chepparaivalaboomigreenworld.com
நன்றி:சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)